முதுமையில் வேண்டும் ஆர்வம்
எது ஒருவரை நீண்ட ஆயுளுடன் உற்சாகமாக வாழ வைக்கிறது?
இப்படி ஒரு கேள்வியுடன் ஆயிரக்கணக்கான முதியவர்கள் மத்தியில் ஓர் ஆய்வு நடத்தப்படுகிறது.
அவர்கள் எல்லாருமே 60 முதல் 85 வயது வரை இருந்தவர்கள் .
ஐந்து வருடங்கள் தொடர்ந்து அவர்கள் வாழ்க்கை முறையை ஆராய்ச்சி செய்த மருத்துவர்கள் எதையும் ஆர்வத்துடன் செய்பவர்களே நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்தார்கள்.
ஆர்வம் இருப்பவர்களுக்கு புதிய உறவுகள் கிடைக்கின்றன.
புதிய அனுபவங்களும், சவால்களும் கிடைக்கின்றன.
அவர்கள் தனிப்பட்ட முறையில் வளர்ச்சி அடைகிறார்கள்.
மனம் உற்சாகமாக இருக்கிறது.
அதிகாலையில் பூங்காக்களில் தனியாக வாக்கிங் போகிறவர்களையும் பார்க்கலாம் .கூட்டமாக நண்பர்களுடன் சிரித்து பேசியபடி நடப்பவர்களையும் பார்க்கலாம் .
நட்பை தேடி நடப்பவர்களுக்கு உடலுடன் சேர்ந்து மனமும் ஆரோக்கியமாக இருக்கும் .
முதுமையில் பலருக்கு ஏற்படும் முதல் பிரச்சனையே தயக்கம் தான்.
உடல் நலத்துக்கு டாக்டர் ஏதாவது செய்யச் சொன்னால் கூட எனக்கு இவ்வளவு வயதாகிவிட்டதே இனிமேல் இதை செய்ய முடியுமா? என்று தயங்கி அதன் பின் அந்த டாக்டரிடம் போவதையே தவிர்ப்பவர்கள் உண்டு.
முதுமையில் உங்களால் உசேன் போல்ட் மாதிரி ஓட முடியாது. விராட் கோலி போல கிரிக்கெட் ஆட முடியாது. அவர்களே அதை எல்லாம் முதுமையில் செய்ய முடியாது என்பதுதான் உண்மை.
மற்றபடி இயல்பான வாழ்வின் அத்தனை பணிகளையும் செய்ய முடியும்.
தயக்கம் என்ற தடை சுவரை அகற்ற வேண்டும் அவ்வளவுதான்.
ஒரு செயலை செய்தால் அதை தொடர்ச்சியாக செய்வதில்லை என்பது முதிய வயதில் இன்னொரு பிரச்சனை எதையாவது செய்வதால் உடலோ மனமோ சோர்ந்து போகிறது என்றால் அதற்கு மாற்று வழி தேடலாம்.
சக நண்பர்களின் ஆலோசனை பெறலாம் .
ஆனால் எதையுமே சில நாட்கள் செய்து விட்டு அதன் பின் தவிர்ப்பது உங்களை நிச்சயமற்ற மனிதராக இந்த உலகத்துக்கு காட்டும் புதுமையில் சில விஷயங்களை நமக்கு மலைப்பு தரலாம். அது எதிர்கொள்ள எளிமையான ஒரு வழி இருக்கிறது.
எளிமையான சின்ன சின்ன வேலைகளை முதலில் செய்யுங்கள்.
அதையெல்லாம் செய்து முடித்ததும் தன்னம்பிக்கையும், உற்சாகமும் கிடைக்கும் .
அதே வேகத்தில் கடினமான வேலைகளையும் செய்து விடலாம்.
எதையும் அவசரமாக செய்ய முடியாது.
எனவே அந்த சூழலுக்கும் தகுந்த முன் ஏற்பாடுகளுடன் தயார் செய்ய வேண்டும்.
வீட்டில் எதுவுமே தீர்ந்து போவதற்கு முன்பு வாங்கி வைப்பது. மின் கட்டணம் போன்ற முக்கியமான கட்டணங்களை இறுதி தேதிக்கு முன்பாக செலுத்துவது என்று வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
குளிர் நாட்களில் யாராவது விறகெடுத்து தீ மூட்டினால் குளிர் காய்ந்து விட்டு பிறகு போய் என் பங்கிற்கு விறகு எடுத்து வருகிறேன் என்று இருக்காமல் முன்கூட்டியே விறகு சேகரிப்பது புத்திசாலித்தனம் அல்லவா?
மனசுக்கு வயதாகுவதில்லை. அது வேகமாக இயங்கும். ஆனால் உடல் அதற்கு ஒத்துழைக்காது எனவே முதுமையில் நன்கு ஓய்வெடுப்பது அவசியம் எதை செய்தாலும் அதன் சாதக பாதகங்களை யோசித்து செய்ய வேண்டும்.
இத்தனை ஆண்டு கால அனுபவம் அதற்கு கைகொடுக்கும் .
இப்படி இருந்தால் முதுவையும் வசந்த காலம் தான்.