எதையும் தள்ளிப் போடாதீர்கள்
வெற்றி பெற்ற மனிதர்கள் வாழ்க்கையில் உள்ள பொதுவான அம்சங்கள் குறித்து பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த ஆய்வுகளின் முடிவில் அறிந்து கொண்ட முக்கியமான ஒரு விஷயம் என்ன தெரியுமா? அவர்கள் எந்த ஒரு வேலையையும் நாளைக்கு என்று தள்ளிப் போடுவதில்லை .
உடனுக்குடன் செய்து முடிக்கிறார்கள் என்பதுதான்.
எல்லாருக்குமே தினமும் நிறைய வேலைகள் இருக்கவே செய்கின்றன.
அவற்றில் ஒரு சில வேலைகளை ஆர்வத்துடன் செய்கிறோம்.
சில வேலைகளை கடமைக்காக செய்கிறோம்.
ஒரு சில வேலைகளை தள்ளிப் போடுகிறோம்.
இப்படி தள்ளிப் போடும் வேலைகளே ஒரு கட்டத்தில் பிரச்சனையாக சிக்கலாக மாறிவிடுகிறது.
மின்சார கட்டணம், தேர்வு கட்டணம் கட்டுவதற்கு அறிவிப்பு வந்துவிட்டது என்றதும் கையில் பணம் இருந்தாலும் பலரும் உடனடியாக கட்டுவதில்லை.
இன்னும் நிறைய நாள் இருக்கிறது பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் அந்த நாளை மறந்தும் போகிறார்கள் .
மின்சாரத்தை கட் செய்த பிறகு அலறி அடித்து ஓடி அபராத தொகையுடன் கட்டுகிறார்கள்.
நிறைய விஷயங்களை தள்ளி போட்டு, தள்ளி போட்டு அது கழுத்தை பிடிக்கும் நேரத்தில் செய்வதை பலருக்கு வாடிக்கையாக இருக்கிறது.
இதற்கு முக்கியமான காரணம் சோம்பல்.
ஒருவரது உடலிலும், மனதிலும் சோம்பல் நுழைந்து விட்டால் அதன் பிறகு அவரிடம் இருக்கும் சுறுசுறுப்பு காணாமல் போய்விடும்.
சுறுசுறுப்பு இல்லாத மனிதரால் எந்த ஒரு செயலையும் தெளிவாக செய்ய இயலாது .
ஒரு கட்டத்தில் எழுந்து குளிக்கவும், சாப்பிடவும் சின்ன சின்ன வேலைகளையும் தள்ளி போட்டு உடல் நலனையும் கெடுத்துக் கொள்வார்கள்.
ஆகவே வாழ்க்கையில் வெற்றியும், மகிழ்ச்சியும் அடைய நினைக்கும் மனிதர்கள் அத்தனை பேரும் தங்களிடமிருந்து உதறித் தள்ள வேண்டிய குணம் சோம்பல் மட்டுமே.
இந்த சோம்பல் ஆரம்பகட்டத்தில் ரொம்பவே சுகமாக இருக்கும்.
உழைக்காமல் சும்மா இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கும் .
ஆனால் கடைசி நேரத்தில் மிகப்பெரிய சிக்கலை கொண்டு வந்து சேர்த்து விடும் .
எனவே எந்த ஒரு வேலையையும் தள்ளிப்போட்டு சோம்பலுக்கு அழைப்பு விடாதீர்கள்.
சோம்பல் காெண்ட நபர்களுடன் பழகாதீர்கள் . அப்படிப்பட்ட நபர்களுடன் சேர்ந்தால் சுறுசுறுப்பு வாழ்க்கையில் காணாமல் போய்விடும்.
ஆகவே சுறுசுறுப்பாக அன்றாட பணிகள் அனைத்தையும் அன்றைய தினமே செய்து முடியுங்கள் .
வெற்றி உங்களை தேடி வந்துவிடும்.