ஏசி எப்படி பயன்படுத்த வேண்டும்
கொளுத்த ஆரம்பித்துவிட்டது கோடை.
இரவில் ஏசி இல்லாமல் பலராலும் தூங்க முடிவதில்லை.
பகலிலும் பல வீடுகளில் ஏசி இயங்கும் இரைச்சல் வெளியில் கேட்கிறது.
இதனால் கோடையில் மின்சார தேவை தாறுமாறாக அதிகரிப்பதால் தடையில்லாமல் மின்சாரம் வழங்குவதற்குள் அரசு திணறி போகிறது.
ஏர் கண்டிஷனரை கச்சிதமாக எப்படி பயன்படுத்துவது என நிறைய பேருக்கு தெரிவதில்லை .
அனலை தவிர்ப்பதற்கு ஏசியை அதிக குளிர்ச்சியாக வைப்பது தான் சரி என்று நினைத்து பலரும் 18 டிகிரி முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை குளிர்ச்சியில் வைக்கின்றனர்.
இதனால் குளிர் எடுக்கும் போது போர்வையை போர்த்திக் கொண்டு தூங்குகின்றனர்.
இதனால் இரண்டு விதமான இழப்புகள் ஏற்படுகின்றன .
மின்சாரமும் தேவையில்லாமல் வீணாகிறது .
நமது உடல் நலமும் கெடுகிறது.
நமது உடலின் சராசரி வெப்பநிலை என்பது 36 அல்லது 37 டிகிரி செல்சியஸ். இதைவிட அதிக அளவில் வெயிலில் இருப்பது எப்படி உடலுக்கு ஆகாதோ அப்படி அதிக குளிரில் இருப்பது ஆகாது.
நமது உடல் 22 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையை தாங்கும் சக்தி கொண்டது.
இதைவிட அதிகமான அனலில் இருந்தால் சோர்வு ஏற்பட்டு மயக்கம் வரும்.
குறைவான குளிர் என்றால் உடல் நடுங்கும்.
ஏசியில் நீண்ட நேரம் குளிரில் தூங்கும்போது நமது உடலில் வெப்ப சமநிலை கெடுகிறது .
இதனால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.
உடலின் சில பகுதிகளுக்கு போதுமான ரத்தம் கிடைக்காமல் போகிறது.
காலப்போக்கில் இது உயர் ரத்த அழுத்தம், மூட்டு வலி போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ஏசியிலேயே பெரும்பாலும் நேரமும் இருப்பவர்களுக்கு இயல்பாக வியர்பதில்லை.
இதனால் உடலில் இருந்து தேவையற்ற நச்சுக்கள் வெளியேறுவதும் தடுக்கப்படுகிறது.
இது நாளடைவில் சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ஏசியை அதிக குளிரில் வைத்துவிட்டு பாேர்வையை போர்த்திக் கொண்டு தூங்குவதில் என்ன அர்த்தம் இருக்கிறது.
25 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்கு மேல் ஏசியை வைப்பது சரியானது.
இதுவே இதமான குளிர்ச்சியை தந்து நம்மை நிம்மதியாக தூங்க வைக்கும்.
இதனால் குறைவான மின்சாரம் செலவாகுவதுடன் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் .
இந்தியர்கள் அனைவரும் ஏசியை இப்படி முறையாக பயன்படுத்தினால் ஆண்டுக்கு 2000 கோடி யூனிட் மின்சார செலவு குறையும் என்கிறது மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் .
இதனால் நிலக்கரியை எரித்து சூழலை மாசுபடுத்தி அதிக மின்சாரம் தயாரிக்க வேண்டிய தேவையும் குறைகிறது.
அது மட்டும் இல்லை ஏசியை இப்படி முறையாக பயன்படுத்தினால் ஓராண்டில் சுமார் 4000 முதல் 6000 ரூபாய் மின் கட்டணமும் குறையும்.