வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டியவை
இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பெற்றோர் இருவரும் பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது .
இதனால் பிள்ளைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு பெற்றோர் தள்ளப்படுகிறார்கள்.
அத்தகைய சமயத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கவலை தான் பெற்றோரின் மனதில் ஊன்றி இருக்கும் .
இதை தவிர்க்க சில அடிப்படை விஷயங்களை குழந்தைகளுக்கு கற்பித்தால் பதற்றம் இன்றி பெற்றோர் தங்கள் பணிகளை மேற்கொள்ளலாம் :
வீட்டில் குழந்தைகள் தனியாக இருக்கும்போது ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் பெற்றோரையும் மற்றவர்களையும் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும்.
அத்தகைய நேரங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் .
நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் தொடர்பு எண்கள், அவசர உதவி எண்கள் ஆகியவற்றை எழுதி வீட்டின் முக்கிய பகுதிகளில் எளிதில் பார்வையில் படும்படி ஒட்டி வைக்க வேண்டும்.
முக்கிய அழைப்புகளுக்கு பதில் அளிப்பது குறித்த பயிற்சியையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது நல்லது.
பெற்றோர் வீட்டில் இருந்தாலும், வெளியில் இருந்தாலும் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது அவசியம் .
பல குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்கும்போது டிஜிட்டல் சாதனங்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள் எனவே டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவது, படிப்பது, வீட்டுப்பாடங்களை முடிப்பது என ஒவ்வொன்றுக்கும் நேரம் ஒதுக்கி அட்டவணையை தயார் செய்து செயல்பட குழந்தைகளுக்கு பெற்றோர் உதவ வேண்டும்.
தினமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெற்றோரில் ஒருவருடன் தொடர்பில் இருக்க குழந்தைகளுக்கு அறிவுறுத்துவது சிறந்தது.
இதனால் தேவையற்ற பதற்றம் குறையும்.
வீட்டின் கதவு தட்டப்படும் ஓசை கேட்டதும் ஓடி சென்று கதவை திறக்கும் ஆர்வம் குழந்தைகளிடம் அதிகம் இருக்கும் .
குழந்தைகளிடம் அவர்கள் வீட்டில் தனியாக இருக்கும்போது யாராவது கதவை தட்டினால் முதலில் வெளியில் இருப்பவர்கள் யார் ? எதற்காக இங்கு வந்திருக்கிறார்கள் என்று கவனிப்பதற்கு கற்றுக் கொடுக்க வேண்டும் .
நன்றாக பழகிய நபராக இருந்தால் மட்டும் கதவை திறக்க வேண்டும்.
பெற்றோரான நீங்கள் எப்போது வீடு திரும்பிவீர்கள் என்பதையும் குழந்தைக்கு மறக்காமல் தெரியப்படுத்த வேண்டும் .
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சில விஷயங்களை சோதித்து பார்ப்பதில் குழந்தைகளுக்கு அதீத ஆர்வம் இருக்கும்.
எனவே தீக்குச்சிகள், கத்தி ஆகியவற்றை அவர்களுக்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும் .
கியாஸ் அடுப்பின் பர்ணர்களையும் முறையாக அணைத்து வைத்திருக்க வேண்டும்.
சற்று வளர்ந்த குழந்தைகளாக இருந்தால் அடிப்படை சமையல் அறை உபகரணங்களை எப்படி கையாளுவது என்பதை கற்றுக் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை முதலுதவி பெட்டியை வீட்டில் வைத்திருப்பதும் அவற்றை பயன்படுத்துவது பற்றி அவர்களுக்கு கொட்டு கற்றுக் கொடுப்பதும் முக்கியமானது.
வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகள் பசிக்கும்போது சாப்பிட ஏற்ற வகையில் தின்பண்டங்களை தயாராக வைத்திருப்பது சிறந்தது.
உடலுக்கு கேடு விளைவிக்கும், பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு இடம் கொடுக்காமல் சத்தான நொறுக்கு தீனிகளை தயாரித்து அவர்களின் கைக்கு எட்டும் வகையில் வைப்பது அவசியம் .
தவிர்க்க முடியாத காரணத்தால் உங்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்கு வர முடியாமல் போனால் குழந்தைகள் தனியாக இருப்பதை தவிர்க்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்யுங்கள்.