பயணத்தில் குழந்தைகள் பாதுகாப்பு
இது கோடை விடுமுறை காலம்.
பெற்றோர் பலரும் தங்களின் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு அல்லது சுற்றுலா தளங்களுக்கோ பயணம் செய்ய திட்டமிடுவது வழக்கம்.
அந்த வகையில் சிறு குழந்தைகளுடனும் அல்லது கை குழந்தைகளுடனும் பயணம் செய்யும் பெற்றோர்கள் பயணத்தின் போது குழந்தைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்த சில குறிப்புகள் :
காரில் செல்லும் போது குழந்தைகள் சீட் பெல்ட் அணிந்து இருப்பதை உறுதிப்படுத்துங்கள் .
எக்காரணம் கொண்டும் குழந்தைகளை டிரைவருக்கு அருகில் உள்ள சீட்டில் அமர வைக்க கூடாது .
பயணத்தின் போது குழந்தைகளை விளையாடுவதை அனுமதிக்க கூடாது.
குழந்தைகளை நடுவில் அமர வைத்து பெற்றோர் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வெளியூர்களுக்கு பயணிப்பதை தவிர்க்கவும் .
பொது போக்குவரத்தை பயன்படுத்தவும்.
சுற்றுலா தளங்களுக்கு செல்லும்போது எப்போதும் குழந்தைகள் மீது அதிக கவனம் தேவை.
கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் பெற்றோர் எப்பொழுதும் குழந்தைகள் கையைப் பிடித்து படி இருக்க வேண்டும்.
குழந்தைகளிடம் குடும்பத் தொலைபேசி எண்கள் அடங்கிய அட்டை எப்போதும் கைவசம் இருத்தல் வேண்டும் .
அந்நியர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென சொல்லிக் கொடுங்கள்.
குளிர் பிரதேசங்கள் எனில் குழந்தைகளுக்கு தேவையான சொட்டர், சூ, சாக்ஸ், ஜெர்கின் அல்லது ஓவர் கோட் உள்ளிட்ட உடைகளை எடுத்துக் கொள்ளுங்கள் .
குறிப்பாக குளிரில் மிகவும் பாதிப்பது காதுதான். எனவே காதுகளை மூட காட்டன் எடுத்துக்கொள்ள மறக்காதீர்கள்.
வெளியூருக்கோ வெளிநாட்டிற்காே செல்லும்போது புதிய இடத்தின் தட்பவெப்ப நிலை, குடிநீர் போன்றவை குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவை ஏற்படுத்தக் கூடும். எனவே பாராசிட்டமல் போன்ற காய்ச்சல் மருந்து சிரப்புகளை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.
டிஜிட்டல் தெர்மாமீட்டர் வைத்துக் கொள்வது நல்லது .
பேண்ட் எய்ட், கிருமி நாசினி போன்றவை அடங்கிய மருந்து பெட்டி வைத்துக் கொள்வது அவசியம்.
பயணத்தின் போது குழந்தைகளின் உணவு விஷயத்தில் அதிக கவனம் தேவை .
சுத்தமான உணவு, பாதுகாப்பான குடிநீரை குழந்தைகளுக்கு தருவதை உறுதிப்படுத்துங்கள்.
குறுகிய நேர பயணம் எனில் வீட்டிலிருந்தே உணவு மற்றும் குடிநீரை எடுத்துச் செல்வது சிறந்தது.
குழந்தைகளுடன் செல்லும்போது பலவித அடுக்குகளை கொண்ட தோல் பையை அவசியம் வைத்துக் கொள்ளுங்கள்.
அதில் டயப்பர், வெட் டிஷ்யூ பேப்பர், பிடித்த பொம்மை, சின்ன போர்வை, குடை, தேவையான உணவு, தண்ணீர், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஒரு செட் அவசியம் இருக்க வேண்டும்.
சற்று வளர்ந்த குழந்தைகளாக இருந்தால் வாழைப்பழம், பிஸ்கட், ஆப்பிள், உலர்ந்த பழங்கள் என்று உங்கள் குழந்தையை சமாளிக்கும் உணவு பொருட்களை அவசியம் வைத்துக் கொள்ளுங்கள்.
சுற்றுலா இடங்களுக்கு செல்கையில் தங்கும் இடம், பாதுகாப்பான நகரின் பிரதான பகுதியில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
வெளிநாட்டு பயணமாக இருந்தால் நீங்கள் செல்லும் நாட்டைப் பற்றி இணையதளத்தில் நன்கு தேடி படித்துப் பாருங்கள்.
அப்போதுதான் உங்கள் குழந்தைக்கு அங்குள்ள தட்பவெப்பத்தை சமாளிக்க என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்லலாம், செல்லக்கூடாது என்று கணிக்க முடியும் .
புதிய ஊராக இருந்தால் தங்கும் இடத்திற்கு அருகில் எங்கு மருத்துவமனை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் .
வெளியில் சுற்றி பார்க்க செல்கையில் குழந்தைகளுக்கு ஒரு செட் கூடுதல் டிரஸ்சை எடுத்துச் செல்லுங்கள்.