பேச பழகு
பேசாத வார்த்தைகளுக்கு நாம் எஜமானாக இருக்க முடியும் .
வாய் தவறி விழும் வார்த்தைகளை திரும்ப அள்ளிட முடியாது.
அவை யாரையும் காயப்படுத்தி விடக் கூடாது.
யாரிடம் எப்படி பேசுகிறோம் என்பது நம் வளர்ச்சிக்கு முக்கியம்.
உங்களை விட வயதில் மூத்தவர்களிடம்
அவர்களுக்கு அனுபவ அறிவு இருக்கிறது என்பதை உணர்ந்து அதை மதித்து பேச வேண்டும்.
உங்களுக்கு இதெல்லாம் புரியாது, உங்களுக்கு ஒன்னும் தெரியாது, உங்களை யார் கேட்டது? உங்க வேலைய பாருங்க போன்ற வார்த்தைகள் அவர்களை காயப்படுத்தி விடும்.
அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம்
எந்த ஒரு அதிகாரியும் தனக்கு கீழே வேலை பார்ப்பவர் சிறந்த உழைப்பாளியாக, தான் சொல்வதைக் கேட்டு அதன் படி நடப்பவராக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள்.
தனக்கு ஆலோசனை கூறுபவராகவோ? தன் மேதாவி தனத்தை காட்டுபவராகவோ ? இருப்பதை விரும்புவதில்லை.
இதை இப்படித்தான் செய்யணும். எனக்கு இது முன்னாலேயே தெரியும்.
உங்களை விட இதில் எனக்கு அனுபவம் அதிகம் போன்ற வார்த்தைகள் வேண்டாம்.
நெருங்கிய உறவுகளுக்குள்
வீடு என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்காது.
நாம் யோசிக்காமல் வார்த்தைகளை கோபத்தில் கொட்ட கூடாது.
"நான் ஒரே ஒரே அடியாய் போய் சேர்ந்த பிறகு தான் இந்த வீடு உருப்படும் "
"அப்படியே பாேய் எங்கேயாவது ஒளிஞ்சு போ" போன்ற வார்த்தைகளை உறவுகள் கேட்கக்கூடாது.
பிள்ளைகளிடம்
குழந்தைகளிடம் பேசத் தெரியாமல், யோசிக்காமல் பேசுபவர்கள் நிறைய பேர் .
"டேய் நாங்க இங்கே பேசுனதை உங்க அப்பா கிட்ட சொல்லிடாதே"
" நாம் இங்கு வந்து போனது உங்க பாட்டிகிட்டே சொல்லக்கூடாது" போன்ற நிபந்தனைகள் கூடாது.
குழந்தைகளிடம் இப்படி ரகசியங்கள் கூடாது .
சக ஊழியர்கள், வாடிக்கையாளர்களிடம்
அலுவலகத்தில் நெருக்கமான ஓரிரு நண்பர்கள் தவிர மற்றவர்களிடம் அளவாக அளந்து பேசி பழகுவது நல்லது.
யார்? யார்? எப்படி இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.
உங்கள் அதிகப்படியான பேச்சு சமயங்களில் உங்கள் வேலைக்கு உலை வைத்து விடலாம் .
அதேபோல் வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளரிடம் அன்பும், கனிவும், கண்டிப்பும் கலந்து பழக வேண்டும்.
இல்லாவிட்டால் இழப்புதான்.
வீட்டில் வேலை செய்பவர்களிடம்
அவர்களை அலட்சியமாக நடத்தக்கூடாது .
தலையில் தூக்கி வைத்து கொண்டாடவும் கூடாது .
இரண்டுமே மோசமான விளைவுகளை தரும் .
அவர்கள் எதிரில் குடும்ப ரகசியங்கள் பேசுவதோ? அக்கம் பக்கம் வீட்டினரை பற்றி பேசுவதோ? கூடாது.
புகுந்த வீட்டு உறவுகளிடம்
சிலர் கல்யாணம் ஆகி புகுந்த வீடு வந்ததும் தன் பிறந்த வீட்டுக் கதையை அவ்வளவையும் ஒன்று விடாமல் ஒப்பிப்பார்கள் .
இது தேவையில்லாத ஒன்று.
பின்னாலில் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் உங்க அத்தை சரியில்லேனு நீயேதான் சொன்ன என்று திரும்பி அவர்கள் கேட்கும் போது திகைக்க நேரிடும்.
புதிதாக அறிமுகமாகும் உறவினர் நண்பர்களிடம்
முதன் முதலில் அதிகம் அறிமுகமாகும் போது அளந்து பேசுவதே நல்லது.
முதல் அறிமுகம் இன்னும் கொஞ்சம் நேரம் இவர்களிடம் பேசிக் கொண்டிருக்க மாட்டோமா? என்று ஏங்கும்படி இருக்க வேண்டும்.
இனிமேல் இவங்க கிட்ட வந்து மாட்டிக்க கூடாது என்று ஒதுங்கும்படி இருக்கக் கூடாது.