வாடகைக்கு விடப்படும் நாடு
இன்றைக்கு ஏறக்குறைய எல்லாமே வாடகைக்கு கிடைக்கின்றன.
வாடகை தாய் வழக்கம் கூட நடைமுறைக்கு வந்து விட்டது.
ஆனால் ஒரு நாடே வாடகைக்கு விடப்பட்ட கதை தெரியுமா?
ஐரோப்பாவில் அமைந்துள்ள குட்டி நாடு லிச்சென்ஸ்டைன்.
சுவிட்சர்லாந்துக்கும், ஆஸ்திரியாவுக்கும் நடுவில் உள்ள இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை வெறும் 40,000 தான்.
கடந்த 2011 ஆம் ஆண்டு வரை ஒரு நாளைக்கு இந்த நாடு முழுவதையும் வாடகைக்கு எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது.
அதற்கான கட்டணம் 70 ஆயிரம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 60 லட்சம் ஆகும்.
இது நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் பிரபல தங்குமிட இணையதளத்தில் லிச்சென்ஸ்டைன் நாடு பட்டியலிடப்பட்டது உண்மை.
இந்த நாடு வாடகைக்கு எடுப்பது சற்று சிரமமான நடைமுறை கொண்டது என்றாலும் அவ்வாறு வாடகைக்கு எடுப்பவருக்கு ராஜ மரியாதைதான்.
அந்த விசேஷ விருந்தினருக்கு வரலாற்று சிறப்புமிக்க கோட்டைகள் உட்பட நாட்டின் முக்கிய சின்னங்களுக்கு தடையற்ற அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் லிச்சென்ஸ்டைனின் வாழும் மன்னரே தலைநகரின் சாவியை தனிப்பட்ட முறையில் விருந்தினர்களிடம் ஒப்படைப்பார்.
அந்த விருந்தினர்கள் நாட்டை சுற்றி பார்ப்பது மட்டுமல்லாமல் கம்பீரமான ஆல்ப்ஸ் மலையில் தனித்துவமான பொழுதுபோக்கு நிகழ்வுகள் மற்றும் வானவேடிக்கை காட்சிகளை அனுபவித்தனர் .
இது அவர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்கியது .
இந்த தனித்தன்மையான வாய்ப்பு பலருக்கும் கனவாக இருந்தாலும் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து இந்த சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.
சமீபத்தில் வைரலான ஒரு வீடியோ இந்த கதையை மீண்டும் பலரது கவனத்திற்கு கொண்டு வந்தது.
அப்போது பலர் அந்த அசாதாரண கதையை பற்றியும், இந்த நாட்டின் வரலாறு பற்றியும் தெரிந்து கொண்டு ஆச்சரியப்பட்டனர்.