கைவிடப்பட்ட அணில் குட்டிகளை பராமரிக்கும் வழிகள்
இயற்கை சூழலில் மரங்களிலும், பொந்துகளிலும் வாழ்பவை அணில்கள்.
சில வீடுகளின் வீட்டின் பரண், ஏசி இயந்திரம் போன்றவற்றில் தாய் அணில் குட்டி ஈன்று விட்டு சென்றுவிடும் அல்லது மரத்திலிருந்து சில குட்டிகள் தவறுதலாக கீழே விழக்கூடும்.
அது தவிர அணில்களின் எதிரி விலங்குகளான காக்கை, பூனை போன்றவை அணில் குட்டிகளை தூக்கி செல்லும்போது அவற்றிடம் இருந்து நீங்கள் காப்பாற்ற கூடும் .
எதுவாக இருந்தாலும் இது போன்ற கைவிடப்பட்ட குட்டிகளை எவ்வாறு பராமரிப்பது என்று தெரிந்து கொள்வோம் .
ஒன்றுக்கும் மேற்பட்ட குட்டிகளை காப்பாற்றி வீட்டுக்கு கொண்டு வந்தீர்கள் என்றால் எந்த காரணத்தைக் கொண்டும் அவற்றை பிரிக்காதீர்கள்.
அவை ஒன்றுக்கொன்று துணையாக இருக்கும் .
அணில் குட்டிகளை வெதுவெதுப்பான வெப்பநிலையில் வைப்பது முக்கியம்.
குட்டிகளை நீங்கள் காப்பாற்றி வந்தவுடன் சிறிது நேரம் உங்கள் உள்ளங்கையில் அவற்றை வைத்திருக்கலாம்.
பின்னர் பருத்தி துணிகளை போட்டு அந்த குட்டிகளை மென்மையாக பொத்தி வைப்பது நல்லது.
இதனால் அவற்றுக்கு தேவையான இயற்கையான வெப்பம் கிடைக்கும்.
சம அளவு தண்ணீர் கலக்கப்பட்ட பாலில் ஒரு சிட்டிகை குளுக்கோஸ் பவுடர் மற்றும் ஒரு துளி தயிர் கலந்து அவற்றுக்கு சிரஞ் மூலம் ஊட்டலாம்.
மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை இவ்வாறு கொடுப்பது நல்லது.
அணில் குட்டிகள் அப்போது சிறுநீர், மலம் கழிப்பதை கண்காணிப்பது முக்கியம் .
அவற்றை தேவையான இடைவெளியில் சுத்தம் செய்து விடுங்கள்.
வளர்ந்த அணிகளுக்கு தேங்காய் துண்டுகள், உடைத்த கடலை, காய்கறிகள், பழங்கள், நட்ஸ் வகைகள் போன்றவற்றை உணவாக கொடுக்கலாம் .
ஓரளவு வளர்ந்த நிலையில் அல்லது காயங்கள் குணமான நிலையில் அணில்களை இயற்கையான சூழலில் அவற்றின் விருப்பம் போல விட்டு விடுவதே சிறந்தது .
அணில் குட்டிகளுக்கு அதிகப்படியான காயங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றுக்கு போதுமான முதலுதவி செய்ய வேண்டும்.
பின்னர் உடனடியாக அவற்றை கால்நடை மருத்துவரிடம் சென்று சிகிச்சைக்காக கொண்டு செல்ல வேண்டும்.
மரத்தில் இருக்கும் கூட்டில் இருந்து கீழே விழுந்து அணில் குட்டிகளுக்கு எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை என்றால் அவற்றை அதன் தாயுடன் சேர்ப்பதே சிறந்த வழியாகும்.
தாய் அணில் நிச்சயமாக தன்னுடைய குட்டிகளைத் தேடி திரும்ப வரும் எனவே குட்டிகளை எந்த இடத்தில் இருந்து கண்டெடுத்தீர்களோ அங்கேயே மிகவும் பாதுகாப்பான முறையில் வைக்க வேண்டும்.
4 மணி நேரத்துக்கு மேலாக தாய் அணில் வரவில்லை என்றால் குட்டிகளுக்கு தேவையான பாதுகாப்பை நீங்கள் வழங்கலாம்.