அண்டகுளம் புகழ் "தாலி ஆணம் "
நாக்கில் நீர் சொட்டு சொட்ட வகை வகையான உணவு சமைத்தல் என்பது இந்தியாவில் சிறப்புடையதாகும்.
அப்படி ஒரு முக்கிய அசைவு உணவு வகை தான் "தாலி ஆணம் " ஆட்டுக்கறியில் தயாரிக்கப்படும் ஒரு வகை குழம்பு. ஆணம் என்றால் குழம்பு என்கிறார்கள்.
பெரும்பாலும் இஸ்லாமியர்கள் வீடுகளில் நெய் சோறு, இடியாப்பம் போன்றவற்றுக்கு இணை உணவு தான் "தாலி ஆணம் " .
பொதுவாக அசைவ உணவு வகைகளில் பட்டை , கிராம்பு, ஏலக்காய், சோம்பு போன்ற வாசனை பொருட்கள் தூக்கலாக இருக்கும்.
அவை எதுவும் இன்றி தயாரிக்கப்படுவது தான் "தாலி ஆணம்".
அநேகமாக வேற எந்த சைவ உணவிற்கும் இந்த அளவுக்கு எளிதாக தயாரிப்பு முறை இல்லை.
அவ்வளவு எளிதான அதே நேரத்தில் மிக சுவையான ஆணம்.
இது எழுத்தாளர் கீரனூர் ஜாகீர் ராஜா தனது துருக்கி தொப்பி நாவலில் இது போன்றதொரு "தாலி ஆணம் " கீரனூர் பகுதியில் மட்டும் உருளைக்கிழங்கு, வெள்ளை பச்சை வண்ணம் கொண்ட நாட்டு கத்தரிக்காயையும் சேர்த்து போட்டு தயாரிப்பது குறிப்பிட்டு இருக்கிறார் .
புதுக்கோட்டை அண்ட குளத்தில் ஒரு மாதிரியும் , அருகே உள்ள கீரனூரில் ஒரு மாதிரியும் "தாலி ஆணம் " தயாரிக்கப்படுகிறது.
ஆலங்குடி கறம்பக்குடிபகுதிகளில் இதே குழம்பு வகையை "தாலி கறி " என்றும் குறிப்பிடுகின்றனர்.
வயிறும் நாக்கும் தானே நாம் படுகிற அத்தனை பாடுகளுக்கும் பிரதானம்.
புதுகோட்டை நகரில் உள்ள அன்பு கேண்டீன் ( புதுக்கோட்டையின் உணவகங்களின் பெரும்பாலானவற்றில் கேண்டீன் என்ற பெயர் தொற்றிக் கொண்டிருக்கும் )
அண்டக் குளத்தில் இந்த "தாலி ஆணம் " மிகவும் பிரசித்தி பெற்றது.
நல்லெண்ணெயில் சின்ன வெங்காயத்தை நசுக்கி போட்டு வதக்கி, தொடர்ந்து கறியைப் போட்டு சுருள வதைக்கி விட்டு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றுடன் நச்சுப்போட்ட பூண்டையும் சேர்த்து கறியை வேக வைக்க வேண்டும்.
கறி வெந்த பிறகு வறுத்த சீரகம், வெந்தயம் ஆகியவற்றையும் கொட்டிவிட்டு வறுத்த புழுங்கல் அரிசி, நாட்டு மல்லி ஆகியவற்றை மைய அரைத்து கொட்டி கொதி வந்து இறக்கினால் "தாலி ஆணம் " தயார்.
பெரிய வெங்காயம், தக்காளி கூட சேர்க்க மாட்டோம்.
வழக்கமான அரிசி சோறு, நெய் சோறு, வெள்ளை குஸ்கா மற்றும் சிற்றுண்டி களுக்கான இட்லி ,இடியாப்பம், ஆப்பம் போன்றவற்றுடன் சேர்ந்து சாப்பிடலாம் என்கிறார் அந்த அன்பு கேண்டீன் உரிமையாளர்.