முடி மீது காதல் என்பது எல்லோருக்கும் உண்டு.
முடி என்பது மாற்றுப்பாலினத்தை ஈர்க்கும் சக்திவாய்ந்தது எனக் கருதினர்.
அதனால்தான் யூதமத பீடம் கி. பி 6 ஆம் நூற்றாண்டிலேயே கூந்தலை முக்காடிட்டு மூடாமல் தெரு வரை வரும் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்றது.
துறவிகளான பிக்குகள், பிக்குனிகள் கூந்தலை மழித்துக் கொண்டனர். கோயிலுக்கு வருபவர் முடியை முக்காடிட்டு மறைத்திருக்க வேண்டும் எனச் சில மதங்கள் அறிவுறுத்தின.
கணவனை இழந்த பிற்பாடு அவர்களுக்கு வனப்பெதற்கு? கைம்பெண்களின் கூந்தலும் மழிக்கப்பட்டன.
மேற்கண்ட விளக்கங்கள் மூலம் கூந்தல் என்பது வசீகரத்தையும் வனப்பையும் தருவது என்பதை உணரமுடிகிறது. அதனால்தான் பாலின பாகுபாடற்று அனைவருமே முடியைப் பராமரிப்பதில் தனிக் கவனம் செலுத்துகின்றனர்.
வயது ஏற ஏற முடி உதிர்தல் மிகுதியாவதை எத்தகைய மூலிகை எண்ணெய்களாலும் மருந்தாலும் தடுக்கமுடிவதில்லை.
பெண்களுக்குப் பரவாயில்லை. அடர்த்திதான் குறைகிறது. ஆண்களுக்கோ 50 விழுக்காட்டினருக்கு உச்சித்தலையில் முடி சுத்தமாக உதிர்ந்து வழுக்கையாகிவிடுகிறது
இந்த மாற்றத்தையும் இயல்பாகச் சிலர் கடந்துவிடுவர். ஆனால் ஒரு சிலரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
இளம் வயதில் அடர்ந்த முடியோடு இருந்த சிலர் முடி உதிர்ந்து வழுக்கைத் தலையோடு வெளியில் செல்ல விரும்புவதில்லை. அதனால் தொப்பி அணிகின்றனர். அது அவர்களுக்கு ஆளுமையைத் தருவதாக அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். (சில நேரங்களில் தொப்பி அணிவதும் சிக்கலாகிப் போகிறது)
எல்லாராலும் எல்லா மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாதுதானே.
எனவே மானிட வாழ்வில் முடி ஒரு அழுத்தத்தைத் தந்துகொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை