மதிய நேர தூக்கம்
சோம்பேறித்தனமா?
இரவு தூக்கத்தை விட சிலர் மதிய தூக்கத்தை அதிகம் நேசிக்கிறார்கள்.
மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தபடியே அப்படியே கண்களை மூடி ஒரு குட்டி தூக்கம் போட்டுவிட்டு பிரஷ் ஆகிவிடுவார்கள்.
பொதுவாக மதிய நேர குட்டி தூக்கத்தை சோம்பேறித்தனமான செயலாக பலரும் கருதுகின்றனர்.
குழந்தைகளும், வயதானவர்களும் மட்டும் மதியம் தூங்கினால் ஏற்றுக்கொள்கிறார்கள்.
யாராக இருந்தாலும் மதியம் லேசாக கண்ணயர்ந்து கொள்வது தப்பில்லை என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.
அவர்கள் உற்சாகமடையவும், கூடுதலாக உழைக்கவும் அது ஒத்துழைக்குமாம்.
மதியம் கண் அசருவது நீண்ட உறக்கமாகி விடாதே! நீண்ட உறக்கமாகிவிட்டால் சோர்வும், மந்தநிலையும், தோன்றிவிடும்.
அதன் பின்பு மீண்டும் இயல்பான வேலைக்குத் திரும்ப அதிக நேரம் ஆகிவிடும் அதனால் ஏன்டா தூங்கினோம் என்ற மனநிலை உருவாகிவிடும்.
இன்னொரு முக்கிய காரணம் நீண்ட நேர மதிய தூக்கம் இரவு தூக்கத்தை பாதித்துவிடும்.
இரவு தூக்கமின்மையால் அவதிப்படுகிறவர்கள் முடிந்த அளவு மதிய தூக்கத்தை தவிர்த்திட வேண்டும்.
மதியம் எவ்வளவு நேரம் கண்ணை இருந்து கொள்ளலாம்
மதிய உணவுக்குப் பிறகு பத்து முதல் 15 நிமிடங்கள் கண்ணை அசந்து கொள்ளலாம்.
வயதானவர்களும், குழந்தைகளும் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை தூங்கலாம்.
மதிய உணவுக்குப் பிறகு 2 மணி முதல் 3 மணி வரை இதற்கு சரியானது.
அதற்குப் பின் தூங்கினால் இரவு தூக்கம் பாதிக்கப்படும் .
மதியம் கண் அயர்வதற்கும், இரவில் தூங்குவதற்கும் இடையில் குறைந்தது ஐந்து மணி நேர இடைவெளி அவசியம்.
அந்த ஐந்து மணி நேரமும் உற்சாகமாக வேலை செய்தால்தான் இரவு தூக்கத்திற்கு உடல் தயாராகும்.
முன்பு பள்ளிகளில் குழந்தைகளை மதிய நேரம் தூங்க வைத்து விடுவார்கள்.
தூக்கம் அவர்களுக்கு மிகவும் அவசியம் குழந்தைகளின் நினைவாற்றலுக்கும், உற்சாகத்திற்கும் அதிக நேர தூக்கம் அவசியமானதாக இருக்கிறது.
வயதானவர்கள் தூக்கமின்மையால் அதிக பாதிப்புக்கு உள்ளார்கள்.
அவர்கள் மதியம் தூங்கி எழுந்தால் மாலையில் சிறிது நேரம் எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் விரைவில் நன்றாக தூக்கம் வரும் வாய்ப்பு உருவாகும். எளிதான உடற்பயிற்சி என்பது நடைப்பயிற்சி ஆகும்.
விரைவில் அதிக நேரம் விழித்திருந்து, வேலை பார்ப்பவர்களும், சிப்டு முறையில் பணிபுரிபவர்களும் மதியம் தூங்குவது நல்லது.
சிலர் மற்றோர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே தூங்கிவிடுவார்கள் .
அவர்கள் போதுமான நேரம் தூங்கி அத்தகைய பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் .
வகுப்பறையில் அமர்ந்து பாடங்களை கவனத்தில் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும், அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்து கொண்டு இருப்பவர்களுக்கோ மதிய தூக்கம் வந்தால் அதை தவிர்க்க எழுந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட்டு ஒரு கோப்பை தண்ணீர் பருகினால் தூக்க கலக்கத்தை தவிர்த்து விடலாம்.
பிடித்த மாணவர்களோடு அப்போது சிறிது நேரம் பேசினாலும், சிறிது தூரம் நடந்து விட்டு வந்தாலும் தூக்கநிலை மாறிவிடும்.