வாழ்க்கை ஒரு வட்டம்ங்க...


காலை 11 மணிக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் நேர்காணலுக்கு அழைத்து இருந்தார்கள்.

நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் விவரத்தை கூறி விட்டு ஹாலில் அமர்ந்து நேர்காணல் அழைப்புக்குக் காத்திருந்தேன்.

சற்று நேரத்தில் பாபு என்று அழைப்பு வந்தது.

உள்ளே சென்றவுடன் சில கேள்விகள் கேட்டு விட்டு உங்கள் பயோடேட்டாவில்  வயது 40 என்று இருக்கே நிஜமா ?

ஆமாம் சார் உண்மை தான்.

அப்படியா ..? எங்கள் நிறுவனத்தில் இளைஞர்களை தான் வேலைக்கு எடுக்கின்றோம். உங்கள் வயது 40 என்று சொல்கிறிர். கொஞ்சம் யோசனை செய்ய வேண்டி இருக்கும் பாபு என்றார்கள்.

பரவாயில்லை சார் நான் வேலை செய்ய தயாராக இருக்கிறேன் என்றுக் கூறினேன்.

மேலும் இதற்கு முன் வேலை செய்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால் திடீர் என்று மூடி விட்டார்கள். அதனால் வேறு வேலை தேடும் சூழ்நிலை உருவாகிவிட்டது சார்...

அந்த அதிகாரி சற்று யோசிப்பது போல் பாவனை செய்து விட்டு பாபு உங்கள் பயோடேட்டாவை கொடுத்து விட்டுச் செல்லுங்கள் தேவைப்படும் போது அழைக்கின்றோம் என்றார்.

மிக்க நன்றி சார் என்று கூறி விட்டு வெளியே வந்தேன். இங்கும் வேலை இல்லை.

மனம் கனத்தது கூடவே தலையும் வலித்தது. பெரும்பாலான இடங்களில் வயதைக் காரணம் காட்டி தவிர்த்து விடுகிறார்கள்.

இறைவா இது என்ன சோதனை...

அனைத்தும் நல்லபடியாக தான் போய்க் கொண்டு இருந்தது முன்பு வேலை செய்த நிறுவனம் மூடும் வரை...
அந்த வேலையை நம்பி வாங்கிய கடன்கள் கழுத்தை நெறிக்கத் தொடங்கியது...

ஒரே மகனின் படிப்பு செலவு, வீட்டுக்கு தேவையான செலவு மேலும்...
மேலும்.. ஐயனே ஈசனே நான் எப்படி சமாளிக்கப் போகிறேன்.

தலை மேலும் வலித்தது. பேருந்துக்கு வைத்து இருக்கும் காசில் காபி சாப்பிட்டு நடந்து வீட்டுக்குச் செல்லலாம் என்று முடிவு செய்து காபி சாப்பிட்டு நடக்கத் துவங்கினேன். வாங்கிய வண்டியும் ஒரமாக இருக்கிறது.

ஆழ்ந்த சிந்தனையில் நடந்து செல்லும் போது ரோட்டின் ஓரத்தில் ஒரு தோல் பை அனாதையாக கிடந்தது.

சின்னதாக ஒரு சபலம் எடுத்து திறந்துப் பார்த்தேன் . குப்பென்று வியர்த்துக் கொட்டியது.
பையில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள்.. கை கால்கள் உதறல் எடுத்தது. இருப்பினும் எடுத்து வைத்துக் கொண்டேன்.

மனம் பலவிதமாக என்னுள் பேசியது. ஒரு பக்கம் எச்சரிக்கை செய்தது. அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து விடலாம் என்ற எண்ணம் தோன்றியது.

ஆனாலும் கட்ட வேண்டிய கடன்களும் , குடும்பச் செலவுகளும் கண் முன்னே நின்று பயமுறுத்தியது.

வீடு வந்து சேரும் வரை மனச்சத்தங்கள் ஏராளம், உடல் முழுவதும் வியர்வை ஊற்றியது. வீட்டில் உள்ள அலமாரியில் பணத்தைப் பத்திரமாக வைத்தேன்.

வெளியே சென்று திரும்பிய மனைவி என்னங்க ஒரு நடுக்கமா இருக்குறீங்க எனக் கேட்டாள்.

வள்ளி அந்தக் கதவை சாத்திட்டு உள்ளே வா என்றேன்.
நடந்த விவரங்களைச் சொல்லி யாராவது கேட்பார்கள் என்றுத் திரும்பித் திரும்பி பார்த்தேன் யாரும் வரவில்லை , எனப் பொய் கூறினேன். பணத்தை எண்ணி பார்த்தேன் மொத்தமாக 12 லட்சம்.

வள்ளி சில மாதங்கள் வேலை கிடைக்கும் வரை நமக்கு கவலை இல்லை. நம் செலவுக்கு இது போதும் என்றேன்.

மனைவி அமைதியாக இருந்தாள். ஏதாவது பேசு என்றேன்.

இந்தப் பணம் நமக்கு வேண்டாங்க என்றாள் மனைவி.

வள்ளி என்ன பேசுற நீ இறைவனா பார்த்து தான் நமக்கு துன்பங்கள் தீர வழி காட்டி இருக்காரு..

உங்க அல்ப புத்திக்கு இறைவன் மேல் பழிப் போடாதீங்க என்றாள்.

வள்ளி எனக்கு இன்னும் வேலை கிடைக்கல கட்ட வேண்டிய கடன்களும் செலவுகளும் கழுத்தை நெரிக்க ஆரம்பித்துவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தப் பணம் நமக்கு எவ்வளவு உதவியாக இருக்குமே நினைத்துப் பார் வள்ளி.

இன்னொருவர் பணத்தில் வாழ்வது தப்புங்க. அதுக்கு பதிலா இருவருமே கஷ்டப்பட்டு சம்பாதிக்கலாம் என்றாள் மனைவி.

அப்போ வீட்டு செலவுக்கு என்ன தான் நான் செய்வேன் என்றுக் கோபமாய் குரலை உயர்த்த..

இறைவன் சோதிப்பார்ங்க ஆனால் நம்மைக் கை விடமாட்டார். என்றுக் கூறி டக்கென்று கழுத்திலிருந்த தாலியைக் கழற்றி இதை விற்று விடுங்கள் எனக்கு மஞ்சள் கயிறு போதும் என்றாள்.

வள்ளி என அதிர்ந்து விட்டேன்.

அடுத்தவங்க பணத்துல வயிற்றை நிரப்பிக் கொள்வதை விட இது எவ்வளவோ மேல்ங்க. இந்தப் பணம் யாருக்குச் சொந்தமோ அவர்களிடம் கொடுத்து விட்டு தான் நீங்கள் வீட்டில் நுழைய வேண்டும் என்று ஓடி கதவை சாத்திக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

மனைவியின் தாலி கையில் கனத்தது. பணப்பையில் ஆராய்ந்துப் பார்த்தேன் முகவரி இருந்தது.
அந்த பங்களாவுக்கு நான் நுழைந்த போது தெய்வீக உணர்வு.

அழைப்பு மணியை அடித்தேன். நெற்றி நிறைய விபூதியுடன் ஒரு பெரியவர் வந்துப் பார்த்தார்.

நடந்த விவரங்களை அவரிடம் கூறி பணப்பையைக் கொடுத்தேன். மகிழ்ந்த அவர் உள்ளே அழைத்துச் சென்று குளிர்பானம் கொடுத்து உபசரித்தார்.

தம்பி நிறுவனத்தில் இருந்து காரில் வரும் போது பணப்பைத் தவறி விழுந்தது விட்டது. திரும்பி தேடிச் செல்லும் போது கிடைக்கவில்லை.

உங்களை போல் நல்லவர்களும் இருக்கிறார்கள். அதான் தவற விட்ட பணம் திரும்ப வந்து விட்டது என்றபடி என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்டார்.

என்னுடைய சூழ்நிலை பற்றிய விவரங்களைக் கூறினேன்.

அப்படியே யோசித்து தம்பி கொஞ்சம் இருங்கள். இதே ஒரு போன் செய்து விட்டு வருகிறேன் என்று உள்ளே சென்றார்.

திரும்பி வந்தவர் தம்பி என்னோட நிறுவனத்தில் வேலை செய்ய உங்களுக்கு விருப்பமா? அடுத்த வாரம் எங்கள் மேலாளர் ஓய்வுப் பெறுகிறார். அவரோட இடத்தில் யாரை நியமிப்பது என நினைத்துக் கொண்டு இருந்தேன்.

நீங்கள் ஏன் அந்த வேலையில் ஏன் சேரக் கூடாது?

நீங்கள் நாளைக்கு சேர்ந்து நிறுவனத்தில் டிரைனிங் எடுங்கள். வேலைக்கான உத்தரவு கடிதம் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடும்.

வேறு யாராவது உங்களுடைய சூழ்நிலையில் இருந்து இருந்தால் இந்த 12 லட்சம் பணம் நிச்சயமாக திரும்ப வந்து இருக்காது.

இந்த வேலை உங்கள் நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும். நான் கொடுக்கும் பரிசு என்றார்...

நான் சில வினாடிகள் கலங்கிப் போய் நின்றிருந்தேன்...

நேர்மையாளனை பிறர் ஏளனமாகப் பார்க்கலாம். ஆனால் அவர்கள் கிடைக்க வேண்டிய அனைத்தும் தாமதமாக கிடைத்தாலும் இறைவன் அருளால் நிச்சயம் கிடைத்தே தீரும்
 இதுதான் உண்மை...

ஒவ்வொரு நேர்மையாளனுக்கு இந்தக் கேடுகெட்ட சமுதாயம் வைத்திருக்கும் இன்னொரு பெயர் இளிச்சவாயன் மற்றும் பிழைக்கத் தெரியாதவன்.

கருத்துரையிடுக

புதியது பழையவை